காரைக்குடி, அக்.30: காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பான்மசாலா, வாயில் மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்பனை செய்யக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆனால் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்த கிராமங்களில் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறைக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டும் ரெய்டு நடத்த இத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. பெயர் அளவில் அவ்வப்போது ரெய்ட் நடத்தி விட்டு தங்களது கடமையை முடித்துக் கொள்கின்றனர். தொடர் ஆய்வு மற்றும் ரெய்டு நடத்துவது கிடையாது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சிகரெட், பீடியை காட்டிலும் 28 சதவீதம் பான் மசாலா மற்றும் வாயில் மெல்லும் புகையிலையால் பாதிப்பு ஏற்படும். இப் பழக்கத்திற்கு பலர் அடிமையாகி உள்ளனர். தவிர பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகஅளவில் பயன்படுத்துகின்றனர். தடை விதிக்கப்பட்டபோது ரெய்டு நடத்திய அதிகாரிகள், காலப்போக்கில் இவ்விற்பனையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


