சிவகங்கை, ஆக.26: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் ரூ.1,500ம், மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் ரூ.2,000 வழங்கப்படுகிறது. இது அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் மிகக்குறைந்த உதவித்தொகையே ஆகும். குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் ரூ.6,000ம், ரூ.10,000ம், ரூ.15,000ம் என மூன்று வகையாகவும், புதுச்சேரியில் ரூ.3,500 முதல் ரூ.5,500 என மூன்று வகையாகவும், தெலங்கானாவில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.4,016 வழங்கப்படுகிறது.
அதைப்போல தமிழகத்திலும் மாதாந்திர உதவித்தொகையை உடனடியாக உயர்த்த வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கொங்கையா முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் தவமணி, மாவட்ட துணைத்தலைவர் முத்துராமலிங்க பூபதி கோரிக்கை விளக்கிப் பேசினர். நிர்வாகிகள் ராமமூர்த்தி, மனோகரன், கருப்புசாமி, முருகன், ராஜேந்திரன், முருகேசன், ஜெயபால், ராமன், சாத்தையா, அன்பரசு மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



