சிவகங்கை, ஆக.28: தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் இளங்கோ, பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசுப் பொதுத்தேர்வு பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அக மதிப்பெண்ணாக 10 மதிப்பெண் வழங்குவது நடைமுறையில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் அக மதிப்பெண் 10, செய்முறைத் தேர்வு 20 என 30 மதிப்பெண் போக 70 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற 70மதிப்பெண்ணுக்கு 15மதிப்பெண் கட்டாயம் பெற வேண்டும். இதுபோல் மற்ற பாடங்களுக்கும் அக மதிப்பெண் 10வழங்கப்பட்டு, 90 மதிப்பெண்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது அறிவியல் பாடத்திற்கு மட்டும் 25 மதிப்பெண்ணுக்கு செய்முறைத் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கப்படுகிறது. 100 மதிப்பெண்ணில் மீதமுள்ள 75 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் மற்ற பாடங்களுக்கு அக மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. எனவே பிளஸ் 1, பிளஸ் 2வகுப்பிற்கு வழங்குவது போல் 10ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கு அக மதிப்பெண் 10 வழங்கி மீதமுள்ள 90மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்த வேண்டும். இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் சமநிலை அடைந்து இடைநிற்றல் குறைந்து உயர்கல்வி பெற வழி வகுக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



