ராமநாதபுரம், செப்.5: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் வழிகாட்டல் படி, நகராட்சி தலைவர் ஷெஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் அறிவுறுத்தல் படி, கீழக்கரை நகரின் பல்வேறு பகுதிகளில் இடையூறாக சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நகராட்சி நிர்வாகம் சார்பில் சமூக நாய்களை பிடிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியின் கீழ், கீழக்கரை நகரில் சுற்றித் திரியும் சமூக நாய்கள் பாதுகாப்பான முறையில் பிடிக்கப்பட்டு, விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு மற்றும் நாய் கடி தடுப்பு ஊசி பணிகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
இப்பணிகளுக்காக 491 சமூக நாய்களை இலக்காகக் கொண்டு பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிடிக்கப்படும் நாய்களுக்கு தேவையான கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டு, சிகிச்சைக்குப் பின் உரிய பராமரிப்பு, கண்காணிப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் சமூக நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், வெறிநாய்க்கடி நோய் பரவலைத் தடுப்பது, மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள், சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

