Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நூற்றாண்டுகளை கடந்த மூடி கிடக்கும் சிறையை திறக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருவாடானை, ஆக.29: திருவாடானையில் மூடி கிடக்கும் கிளை சிறைச்சாலையை மீண்டும் திறக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதிக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் தாலுகா அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையம் மற்றும் கிளை சிறைச்சாலை ஆகிய அனைத்தும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வந்தன. நூற்றாண்டுகளைக் கடந்த இந்த கிளை சிறைச்சாலை, இந்திய விடுதலை இயக்க வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது. கடந்த 1942ம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது, தேவகோட்டையில் பொதுக்கூட்டம் நடத்திய சின்ன அண்ணாமலை, ராமநாதன் உட்பட 5 பேரை பிரிட்டிஷ் அரசு கைது செய்து திருவாடானை கிளை சிறையில் அடைத்தது.

இவர்களை மீட்க செல்லத்துரை என்பவரது தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் திரண்டு வந்து, வெள்ளையர்களின் தடைகளைத் தகர்த்து சிறையை உடைத்து தியாகிகளை மீட்டனர். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சிறைச்சாலை பழுதடைந்த காரணத்தால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. தற்போது திருவாடானை கிளை சிறைச்சாலை நிரந்தரமாக மூடப்பட்டு விட்டதாக அரசு முறைப்படி அறிவித்துள்ளது. இதனால் இப் பகுதியில் இருந்து கைது செய்யப்படும் விசாரணை கைதிகளை பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. தொண்டி, திருப்பாலைக்குடி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்குகளில் கைதாகும் நபர்களை மாவட்டத்தின் வெவ்வேறு சிறைகளுக்குக் கொண்டு செல்வதால், காவல்துறையினருக்குப் பணிச்சுமையும், கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்களுக்கு தேவையற்ற அலைச்சலும் பொருள் விரையமும் ஏற்படுகிறது.

அதே வளாகத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த நீதிமன்றத்திற்குப் பதிலாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 7ஆண்டாக செயல்பட்டு வருகிறது. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிளை சிறைச்சாலை மட்டும் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இது இப்பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சுதந்திரப் போராட்ட வரலாற்றுச் சிறப்புகளையும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தற்போதைய அரசு வரலாற்று சிறப்புமிக்க திருவாடானை கிளை சிறைச்சாலையை மீண்டும் கட்டிட உத்தரவிட வேண்டும் எனப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.