Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு

ராமநாதபுரம், ஆக.29: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை மறுகட்டமைப்பு செய்யப்படுவதால் அதற்காக நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்வு நடக்க உள்ளது. பெற்றோர், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்போடு அரசு பள்ளிகளின் வளர்ச்சிகாக பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அது கடந்த 2024 முதல் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. இதில் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 24 பேர் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மறுநாள் ஆக. 31ல் முடிவடைகிறது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,049 அனைத்து நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி ஒவ்வொரு பள்ளியிலும் 24 புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு முன்னோட்டமாக நேற்று அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள் தலைமையில் பெற்றோர், ஆசிரியர்கள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் அதாவது புதிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் தேர்வு அடுத்த மாதம் செப்.12, செப்.19ம் தேதிகளில் நடக்க உள்ளது.

இதில் முதற்கட்டமாக 381 தொடக்கப் பள்ளிகளுக்கும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 375 தொடக்கப் பள்ளிகளுக்கும் நடக்கிறது. இதையடுத்து செப்..26ம் தேதி 156 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கும், அக்.10ம் தேதி 137 அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நடக்க உள்ளது. எனவே உள்ளூர் அரசு பள்ளி வளர்ச்சிக்காக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு தேர்வில் இடம் பெற வேண்டும் என கலெக்டர் சிவகுருபிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.