சிவகங்கை, செப். 28: சிவகங்கை மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் ஒன்று முதல் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஊராட்சி மன்றங்கள் மூலமே செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும் முன்பும், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படும் போதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இவை தவிர அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்கள் கட்டாயமாக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. உள்ளாட்சி தினம் மற்றும் தேவை ஏற்படும்பட்சத்தில் பல்வேறு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் கிராமத்தினர் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்னைகள், அடிப்படை வசதி தேவைகள், ஊராட்சி மன்றங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்புவர். இதில் காரசார விவாதங்கள் நடக்கும். இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை ஊழியர்களில் ஒருவர் கலந்து கொண்டு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், தீர்மானங்களை பதிவு செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அளிக்கிறார். ஆனால் ஆண்டுதோறும் கட்டாயமாக நடத்தப்படும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் ஏராளமானவை கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளன. முன்பு இக்கூட்டங்கள் சம்பிரதாய அளவில் அரசின் பதிவிற்காக மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது என்பதற்கான அறிவிப்புகளை கிராம மக்கள் அறியும்படி செய்ய போஸ்டர்கள், மைக் செட் மூலம் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதனால் கிராம சபைகளில் கலந்து கொள்ளும் கிராம மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறியதாவது: கிராமசபை கூட்டங்களில் கலந்து கொள்வதில் தற்போது கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இக்கூட்டங்களில் சாலை வசதி, கண்மாய், கால்வாய், அரசு இடம், சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு, சுடுகாட்டிற்கு பட்டா போட்டு எடுத்து கொண்ட தனியார், முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, ரேசன் கார்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர். ஆனால் இவைகளில் பெரும்பாலான கோரிக்கைகள் மீது நடவடிக்கை இல்லை. தற்போது அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முழுமையாக நிவைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


