மானாமதுரை அருகே ஆயுதங்களுடன் மிரட்டல் விடுத்த ரவுடிகள் தட்டி கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு: போலீசார் ரோந்து இல்லாததே காரணமென கிராமத்தினர் புகார்
மானாமதுரை, செப். 28: மானாமதுரை அருகேயுள்ள உருளி கிராமத்திற்குள் நேற்று முன்தினம் இரவு 8:45 மணிக்கு மேல் இரு டூவீலர்களில் அடையாளம் தெரியாத 5 பேர் வந்தனர். டூவீலர்களில் பயங்கர ஆயுதங்களுடன் வேகமாக சுற்றியதை தொடர்ந்து கிராம மக்கள் மானாமதுரை சிப்காட் போலீசிற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்து நீண்ட நேரமாகியும் போலீசார் வராத நிலையில் ரவுடி கும்பல் மானாமதுரை நோக்கி சிவகங்கை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து உருளி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (22), முத்திருளன் (22) ஆகிய இருவரும் சென்று அவர்களை கொன்னக்குளம் விலக்கு ரோடு அருகே தடுத்து நிறுத்தினர். யார் நீங்கள்? எதற்காக ஊருக்குள் வந்தீர்கள்? என கேட்ட போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து சாவகாசமாக புறப்பட்டு சென்றனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராமத்தினர் கூறியதாவது: உருளி, குடஞ்சாடி, மாங்குடி கிராமங்களை சேர்ந்த பலர் விவசாயம், விறகு வெட்டுதல், கட்டுமான தொழில் போன்ற தினக்கூலி வேலைக்கு சென்று வருபவர்கள். கடந்த சில மாதங்களாக சிவகங்கை மெயின் ரோட்டில் ஹைவே பெட்ரோல், சிப்காட் ரோந்து போலீசாரை பார்க்க முடியவில்லை, சிப்காட் போலீஸ் எல்லைக்குட்பட்ட சில கிராமங்களுக்கு போலீசார் ரோந்து வருவதே கிடையாது. அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் தகவல் தெரிவித்தாலும் உடனே வருவதில்லை. இரவு நேர பணியில் உள்ள காவலர்கள் போனை எடுப்பதே இல்லை.
சிவகங்கை, மானாமதுரைக்கு சென்று விட்டு இரவில் ஊருக்கு திரும்பும் போது தைல மரக்காடுகளில் இருந்து திடீரென வெளிவரும் மர்மநபர்கள் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். தராதவர்களை அடித்து உதைக்கின்றனர். தினமும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


