Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சிவகங்கையில் மாலை நேர கல்லூரி மீண்டும் துவக்கப்படுமா..? மாணவர்கள் எதிர்பார்ப்பு

சிவகங்கை, செப். 28: சிவகங்கையில் மாலை நேர கல்லூரியை மீண்டும் துவங்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, பூலான்குறிச்சி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருபாலரும் படிக்கும் அரசு கலை கல்லூரியும், சிவகங்கையில் மகளிர் அரசு கலை கல்லூரி என மொத்தம் நான்கு அரசு கலை கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இதில் சிவகங்கையில் உள்ள மகளிர் கல்லூரி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி 70ஆண்டுகளுக்கு முன்பும் பூலான்குறிச்சி, காரைக்குடி அரசு கல்லூரிகள் 30 ஆண்டுகளுக்கு முன்பும் துவங்கப்பட்டது. தற்போது மானாமதுரையில் அரசு கலை கல்லூரி துவங்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள் துவங்கப்பட்ட காலத்தில் மேல்நிலை கல்வி முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் போதிய இடங்கள் இல்லாமல் தனியார் கல்லூரிகளிலோ அல்லது வெளிமாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளிலோ சென்று படிக்க வேண்டிய நிலை மாணவர்களுக்கு உள்ளது. சிவகங்கையிலுள்ள மன்னர் துரைச்சிங்கம் கல்லூரியில் சுமார் 3 ஆயிரம் மாணவ, மாணவியர், மகளிர் கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கல்லூரியில் உள்ள இடத்தை விட 20 மடங்கு கூடுதலாக உள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கானோருக்கு இடம் கிடைப்பதில்லை.

இந்நிலையில் கல்வியாளர்கள், மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப கடந்த 2016ம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகத்தின் மாலை நேர கல்லூரி சிவகங்கையில் மருதுபாண்டியர் நகர் அரசு மேனிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கப்பட்டது. மாலை நேர கல்லூரியில் படிக்கும் பட்டப்படிப்பு, அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பிற கல்லூரிகளில் படிக்கும் பட்டப்படிப்பிற்கு சமமானதாகும். பி.ஏ (தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி (கணிதம், கணினி அறிவியல்), பி.காம், பி.பி.ஏ உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகள் மாலை நேர கல்லூரியில் இருந்தன. ஆனால் 2019ம் ஆண்டு இந்த மாலை நேர கல்லூரி மூடப்பட்டது. அதன்பிறகு இதுவரை செயல்படவில்லை. மீண்டும் மாலை நேர கலை, அறிவியல் கல்லூரியை துவங்கி தொடர்ந்து நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.