Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயிர் காப்பீடு வழங்கக் கோரி வேளாண்மை அலுவலகம் முற்றுகை

மானாமதுரை, ஜூன் 26: மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் வேளாண்மைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட செந்தட்டியேந்தல் வருவாய் கிராமத்தை சேர்ந்த அரசகுளம், புதுக்குளம், தாலிக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2025-26 பருவத்தில் போதிய மழை இல்லாததால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இப்பயிர்களுக்கு ஏற்கனவே விவசாயிகள் இன்ஸ்சூரன்ஸ் செய்திருந்த நிலையில் சாவியாகி போன பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி வேளாண்மைத் துறையினரிடம் விவசாயிகள் மனுக் கொடுத்தனர்.

ஆனால் சுமார் 180 ஏக்கர் நிலங்களுக்கு இதுவரை பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் வறட்சி நிவாரணம் வழங்கப்பட வில்லை பல மாதங்களாக வேளாண்மை அலுவலகத்திற்கு வந்து செல்லும் விவசாயிகள் அலைகழிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று வேளாண்மைத்துறை அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்களது கோரிக்கை மனுவை வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

மனுவை பெற்றுக்கொண்ட விவசாயத்துறை அதிகாரிகள் நடவடிக்கை குறித்து எந்தவித உத்தரவாதமும் அளிக்காததால் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், அலுவலகம் முன்பு திரண்டிருந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக வேளாண்மைத் துறை அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவியது. மானாமதுரை போலீசார் வந்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.