ராமநாதபுரம், ஜூன் 26: ராமநாதபுரத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் பேரணி நடந்தது. ராமநாதபுரம் ஆயுதப்படை மைதான வளாகத்தில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் பேரணி நடந்தது. கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். எஸ்.பி. சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாரத்தான் போட்டி கலெக்டர் அலுவலக வளாகம் உள்ள சேதுபதி நகர் ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கி ராஜா மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.தொடர்ந்து போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும்போது, போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், கடந்த 15 நாட்களாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தினந்தோறும் சுமார் 1,17,000 மாணவ, மாணவிகள் காலையில் முதல் நிகழ்வாக போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்று வருகின்றனர் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, உதவி இயக்குநர் பத்மநாபன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
