திருவாடானை, ஜூலை 23: திருவாடானை துணை மின் நிலையத்திற்குட்பட்ட நெடுமரம், அறிவித்தி, அந்திவயல் மற்றும் அறநூற்றிவயல் உள்ளிட்ட பகுதிகளில், சீரான மின்சாரம் கிடைக்கும் வகையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) அமைக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதிகளில் ஏராளமான புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் கூடுதல் மின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தழுத்த மின்சாரம் கிடைப்பதாலும், அடிக்கடி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பவர் கட் செய்யப்படுவதாலும் சீரான மின்சாரம் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர் தற்சமயம் அப்பகுதியில் செயல்பட்டு வரும் டிரான்ஸ்பார்மரில் உள்ள இரு மின்கம்பங்கள் சேதமடைந்து எந்த நேரத்திலும் கீழே ஒடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ? என்ற ஒரு வித அச்சத்துடன் இரவு நேரங்களில் இந்த 4 கிராமங்களும் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



