திருவாடானை, ஜூலை 23: திருவாடானையில் உள்ள புகழ் பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோயிலின் திருக்குளத்தைச் சுற்றி பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையின் மையப்பகுதியில் ஆதிரெத்தினேஸ்வரர் சமேத சிநேக வல்லி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் முன்பாக வாசுகி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பக்குளம் உள்ளது. இக்கோயில் திருக்குளம், பக்தர்கள் நீராடவும், கோயில் நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தற்போது குளத்தைச் சுற்றியுள்ள பகுதி சீரற்ற நிலையில் உள்ளதால், பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுவதாகவும், குறிப்பாக மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுவதாகவும் தெரிவிக்கின்றனர். பேவர் பிளாக் சாலை அமைப்பதன் மூலம் பக்தர்கள் சிரமமின்றி குளத்தைச் சுற்றி வந்து வழிபடுவதற்கு வசதியாக இருக்கும். குளத்தின் தூய்மையும் பராமரிப்பும் மேம்படும் என்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் ஒருமித்த கோரிக்கையாகும்.



