சிவகங்கை: சிவகங்கை அருகே பிரவலூரில் கல்வட்டம் மற்றும் ஈமச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கிராமத்தைச் சேர்ந்த சரவணன் அளித்த தகவலின் பேரில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா பிரவலூரில் கள ஆய்வு செய்து தெரிவித்ததாவது: பிரவலூர் கிராமத்தின் வடக்குப்பகுதியில், கடம்பன் குடி கண்மாய்க்கு தெற்குப் பகுதியில் பரந்து விரிந்த ஒரு மேட்டுப்பகுதியும் அதன் அருகில் ஒரு ஓடையும் காணப்படுகிறது. அங்கு மேற்பரப்பில் ஏராளமான கல்வட்டங்களும், ஈமத்தாழிகளும் உள்ளன.
மண் அரிப்பு காரணமாக பெரும்பாலான ஈமத்தாழிகள் வெளியில் நன்கு தெரிகின்றன. மேலும் அதிகமான கல்வட்டங்களும், இரண்டு குத்துக்கற்களும் காணப்படுகின்றன. மேலும் ஆங்காங்கே உடைந்த கருப்பு, சிவப்பு நிறப் பானை ஓடுகளும், இரும்புக் கசடுகளும், குவார்ட்ஸ் வகைக் கற்களும் காணப்படுகின்றன. இவை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச் சின்னங்களாக இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஏனெனில், பெருங்கற்காலத்தில் மனித எலும்புச் சிதைவுகள் மற்றும் கல்லறைப் பொருட்கள் பெரிய மண் பானைகளில் வைக்கப்பட்டு மூடியால் மூடப்படும். சில நேரங்களில் அதன் மேல் கல் மற்றும் கல் குவியல் அமைக்கப்பட்டது. கல் திட்டை என்ற டால்மென், குழி அடக்கம், பானை அடக்கம் எனப்படும் முதுமக்கள் தாழி, கல்வட்டம் மற்றும் கற்குவை எனப் பல முறைகளில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட ஈமச்சின்னங்கள் உள்ளன.
இப்படித் தொன்மையான பெருங்கற்படைச் சின்னங்கள் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன. இங்கும் இரும்பை உருக்கிக் கருவிகள் செய்யப்பட்டிருக்கலாம். ஏனெனில் பிரவலூரில் உள்ள இப்பகுதியில் இரும்புக் கசடுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிக்கு அருகிலேயே பெருங்கற்கால மக்களின் வாழ்விடப் பகுதியும் அமைந்திருக்க வாய்ப்புள்ளது. இவை குறித்து சிவகங்கை மாவட்டத் தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.



