Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பள்ளி மாணவர்கள் அவதி; புதிதாக சாலை அமைக்க வேண்டும்: பெற்றோர்கள் வலியுறுத்தல்

சிவகங்கை, ஆக.21: சிவகங்கை அருகே நாமனூர் ஊராட்சி லட்சுமிபுரம், பெருமாள்பட்டி கிராமத்தில் சாலை அமைக்கவும், பஸ் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. லட்சுமிபுரம், பெருமாள்பட்டி கிராமத்தில் சுமார் 250 குடும்பங்களைச் சார்ந்த 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவ, மாணவிகள் 100 பேர் வெளியூர்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இதில், சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள கீழப்பூங்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மற்றவர்கள் மேலூர், மதகுபட்டி, திருக்கோஷ்டியூர், சோழபுரம், உறங்கான்பட்டி, கோட்டநத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

கீழப்பூங்குடி அரசுப் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தினமும் காட்டுப்பாதை வழியாகவே சைக்கிளிலும், நடந்தும் செல்கின்றனர். இதனால் பெற்றோர் அச்சத்துடனேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து நாமனூர் மகாலிங்கம் கூறியதாவது: பெருமாள்பட்டி பகுதியையும் லட்சுமிபுரத்தையும் இணைக்கும் சுமார் 1 கி.மீ தொலைவுள்ள சாலை கடந்த 20ஆண்டுகளாக குண்டும் குழியுமாக சேதமடைந்து கிடக்கிறது. சாலையை சரி செய்ய வேண்டும் என ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் 108 ஆம்புலன்ஸ் கூட இங்கு வருவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.

எனவே மேலூரில் இருந்து திருமலை வரை லட்சுமிபுரம் வழியாகச் செல்லும் அரசு பேருந்தை காலை 8மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் பள்ளி நேரங்களில் இயக்க வேண்டும். மேலும் சிவகங்கையிலிருந்து மல்லாகோட்டைக்கு மதகுபட்டி வழியாகச் செல்லும் அரசுப் பேருந்தை ஒக்கூர், கீழப்பூங்குடி, வீரப்பட்டி, லட்சுமிபுரம், நாமனூர் வழித்தடத்தில் இயக்க வேண்டும். சாலையை சரி செய்யவும், அரசு பஸ்களை இவ்வழித்தடத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.