சிக்கல் அரசு பள்ளியில் புதிய பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் நியமிக்கவில்லை: கலெக்டரிடம் கிராமமக்கள் புகார்
ராமநாதபுரம், ஜூலை 18: சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் இல்லாததால், மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு செல்ல கல்வித்துறை அறிவுறுத்தியது. நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பல்வேறு கிராம மக்கள் கலெக்டரிடம் முறையிட்டனர். கடலாடி ஒன்றியம் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பில் வரலாறு, வணிகவியல், பொருளியல், கணக்கு பதிவியல் பாடங்கள் கொண்ட கலைப்பிரிவு மற்றும் கணினி அறிவியல் கொண்ட தொழிற்பிரிவு என இரு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. இதில் 58 மாணவ, மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர். இப்பிரிவுகளுக்காக தற்காலிகமாக 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நிதியில்லை என மாவட்ட கல்வித்துறை கூறியுள்ளது. இதனால் இப்பிரிவுகளில் உள்ள மாணவ, மாணவிகளை அருகிலுள்ள பள்ளிகளில் சேர்ந்து படிக்கவும் அல்லது இப்பள்ளியில் உள்ள அறிவியல் பிரிவு, கணிதம் மற்றும் அறிவியல் சேர்ந்த பிரிவில் சேர்ந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். பள்ளி தொடங்கி ஒன்றரை மாதங்கள் படித்த பின் வேறு பள்ளிகளுக்கு செல்வது சிரமம் ஏற்படும். மேலும் மாணவிகள் நீண்ட தூரம் சென்று வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சேரும் நிலை உள்ளது. அதனால் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே கல்வியை தொடர நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். சிக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் முறையிட்டு மனு அளித்தனர்.




