திருப்புத்தூர், செப். 17: திருப்புத்தூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்றுபலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. முடிவில், சிலைகள் அங்குள்ள குளத்துநீரில் கரைக்கப்பட்டன. திருப்புத்தூர் மற்றும் அதனை அடுத்துள்ள பல்வேறு பகுதிகளில், 26 இடங்களில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை, விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சிலைகள் அப்பகுதிகளில் இருந்து, பல்வேறு அலங்காரங்களுடன் வாகனங்களில், சீரணி அரங்கம் வந்த நிலையில், அங்கிருந்து ஊர்வலம் நடைபெற்றது.
இதன்படி தென்மாபட்டு, அஞ்சலக வீதி, மதுரை ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக புதுப்பட்டி குளத்தை வ வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் 52 விநாயகர் சிலைகளை பெண்கள் தலையில் சுமந்தபடி, வாகனங்களுக்கு பின்னால் வந்தனர். இதன்முடிவில் அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் தீப ஆராதனை நடத்தப்பட்டு, குளத்து நீரில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில் டிஎஸ்பி சண்முகசுந்தரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஊர்வலத்தின்போது சாலையின் இரு புறங்களிலும் நின்றிருந்து ஏராளமான பொதுமக்கள் வழிபாடுகள் நடத்தினர்.


