Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விதை முளைப்பு திறன் அறிந்து விற்பனை செய்ய வேண்டும்: வேளாண் துறையினர் அறிவுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 16: தனியார், அரசு மற்றும் அரசு சார்ந்த விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்வதற்கு முன் அதன் முளைப்பு திறனை அறிந்து கொள்ள வேண்டும் என வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது: தனியார், அரசு மற்றும் அரசு சார்ந்த விதை விற்பனை நிலையங்கள் விதையினை உற்பத்தியாளர் அல்லது மொத்த விநியோகஸ்தரிடம் கொள்முதல் செய்யும் போது விதை முளைப்பு திறன் அறிக்கையினை தவறாது பிற ஆவணங்களுடன் கேட்டு பெற்று கொள்வது கட்டாயமாகும். விதை மாதிரிகளை எடுத்து விதை பரிசோதனை நிலையத்திற்கு பணி விதை மாதிரியாக அனுப்பி மீண்டும் முளைப்பு திறனை உறுதி செய்திடலாம். விதை ஆய்வாளர் விதை குவியல்கள் உற்பத்தியாளரிடமிருந்து வரப்பெற்றவுடன் தகவல் தெரிவிக்க வேண்டும். விதை ஆய்வாளர் அலுவல் விதை மாதிரிகளை சேகரித்து விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி விதை முளைப்பு திறன், புறத்தூய்மை ஆகியவற்றை அறிந்து தக்க நடவடிக்கையினை மேற்கொள்வார்.

விவசாயிகளின் நலன் கருதி விதை குவியல்களில் அவ்வப்போது விதை மாதிரிகள் எடுத்து பிளாஸ்டிக் டிரே முறையில் முளைப்பு திறன் அறிந்து விற்பனை செய்திட வேண்டும். சிறிய பிளாஸ்டிக் டிரேயில் நன்றான தண்ணீர் விட்டு கழுவி காய வைத்த மணலை நிரப்ப வேண்டும். இதனால் மணலில் உள்ள நச்சு பொருட்கள் நீங்கி விடும். டிரேயில் உள்ள மணலில் தண்ணீர் விட்டு விதைகளை அழுத்தி விட வேண்டும் அல்லது அதன்மேல் 12 செ.மீ அளவிற்கு மணல் தூவி விட வேண்டும். விதை முளைக்க தேவையான தண்ணீரை அவ்வப்போது இட்டு மணல் உள்ள டிரே ஈரப்பதத்துடன் இருத்தல் அவசியமாகும். விதை முளைப்பு திறனை பயிறுக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட நாட்களில் கணக்கீடு செய்ய வேண்டும். பருத்திக்கு 12வது நாள் கணக்கீடு செய்ய வேண்டும். மேற்கூறியவாறு தனியார் அரசு, அரசு சார்ந்த விதை விற்பனை நிலையங்களில் முளைப்பு திறன் அறிந்து விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்திட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.