Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆடி அமாவாசைக்கு மதுரை, திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

மானாமதுரை, ஜூலை 15: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சி, மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என்றும், வழக்கமாக இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டிலேயே காசிக்கு அடுத்த இடத்தில் ராமேஸ்வரம் முக்கிய ஆன்மிக தலமாக உள்ளது. முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் தர்ப்பணம் எனும் திதி கொடுப்பதற்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக ஆடி மாதம், தை மாதங்களில் வரும் அமாவாசையன்று திதி கொடுப்பது மற்ற நாட்களை காட்டிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ராமேஸ்வரம் தவிர ராமநாதபுரம் அருகே உள்ள சேதுக்கரை, மானாமதுரை அருகே உள்ள திருப்புவனத்திலும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்படுகிறது. இந்த மூன்று தலங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்காக வெளியூர்களில் இருந்து வருவதற்கு பஸ்களை பயணிகள் விரும்புவதில்லை. பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாலும், திதி கொடுப்பவர்கள் நீண்ட தூரம் இருந்து வருவதற்கு ரயில் பயணமே அவர்களுக்கு வசதியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி ஆடி அமாவாசை திதி வருவதால் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக செல்லும் பயணிகள் ரயில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகரிக்கும். இதனால் பெட்டிகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடும். பெண்கள், முதியோர் நின்று கொண்டே பயணிக்க வேண்டியதிருப்பதால் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். வழக்கமாக மதுரையில் இருந்து காலை 6.50 மணிக்கும், மதியம் 1.50 மணிக்கும் ராமேஸ்வரத்திற்கு செல்லும் பயணிகள் ரயில்களிலும், அதேபோல திருச்சியில் இருந்து 6.30 மணிக்கு புறப்படும் ரயிலிலும் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகி செந்தில்குமார் கூறியதாவது: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு திதி கொடுக்க தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

பஸ் கட்டணம் ரயில் கட்டணத்தை விட அதிகம் என்பதாலும் வயதான பக்தர்கள் நீண்ட நேரம் பஸ்களில் அமர்ந்து செல்ல முடியாததால் பெரும்பாலான பயணிகள் ரயில்களை நம்பி உள்ளனர். கடந்த ஆண்டு ராமேஸ்வரம் சென்ற போது பஸ்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் முதியோர்கள் பலர் மயக்கமடைந்தனர். இவர்களுக்கு ரயில் பயணமே வசதியாக இருக்கும். எனவே திருச்சி, மதுரை கோட்ட அதிகாரிகள் மதுரை, திருச்சியில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்குவதுடன் ராமேஸ்வரத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.