மானாமதுரை, ஆக.14: மானாமதுரை தேவர்சிலை அருகே உள்ள ஏடிஎம் மையம் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் பணம் எடுக்கவரும் வாடிக்கையாளர்கள் குப்பைகள், துர்நாற்றத்தை சகித்துகொண்டு பணம் எடுக்கவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மானாமதுரை தேவர்சிலை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தினை சுந்தரபுர அக்ராஹாரம், செட்டியதெரு, நல்லதம்பியா பிள்ளை தெரு, மாரியம்மன்கோயில் தெரு, நாகலிங்கநகர், பழைய போஸ்ட் ஆபிஸ்தெரு, பட்டறை தெரு, அலங்கார் நகர், மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இம்மையத்தில் கடந்த சில மாதங்களாக தூய்மை பணிகள் மேற்கொள்ளாமல் விடுபட்டதால் மையத்தின் உள்ளே பணம் எடுத்த ரசீதுகள், வாடிக்கையாளர்கள் விட்டு சென்ற குப்பைகள் நிறைந்து கிடக்கிறது. குளிர்சாதன இயந்திரங்கள பழுதடைந்து துருப்பிடித்து கிடக்கிறது. விளக்குகள் முழுமையாக எரிவதில்லை. இரவு நேரங்களில் அவசரத்தேவைகளுக்காக பணம் எடுக்க வரும்போது ஏடிஎம் உள்ளே விளக்கு இல்லாததால் கையில் கொண்டு வரும் செல்போன் வெளிச்சத்தில் பணம் எடுக்கவேண்டிய நிலை உள்ளது. செல்போன் விளக்கு வெளிச்சம் குறைவு காரணமாக பின் நம்பரை மாற்றி அடித்துவிடுவதால் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது. இணையதளம் இணைப்பு முழுமையாக இயங்காததால் ஓடிபி ரகசிய எண் பதிவு செய்ய முடியாத நிலையில் பரிவர்த்தனை துண்டிக்கப்படுகிறது. மேலும் பெண்கள் விளக்குகள் இல்லாததால் ஏடிஎம்மில் பணம் எடுக்க அச்சமடைகின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சண்முகம் கூறியதாவது: ஏடிஎம் மையத்தில் கடந்த ஒரு மாதமாக விளக்கு முழுமையாக எரியவில்லை. இரவில் பணம் எடுக்க வருபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவில் பணம் எடுக்க வருபவர்களை நோட்டமிட்டு கொள்ளையர்கள் இங்கும் வழிப்பறியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே வங்கி நிர்வாகம் ஏடிஎம் மையத்தில் விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.



