Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வெப்பம் அதிகமாக இருப்பதால் கால்நடைகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்: அதிக தண்ணீர், பசுந்தீவனம் நலம் தரும்

சிவகங்கை, ஆக. 14: தொடர்ந்து வெப்பம் அதிகமாக இருப்பதால் கால்நடைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: கால்நடைகளின் ஆரோக்கியத்துக்கு அதிக வெப்பம் பெரும் சவாலாக உள்ளது. அதிகமாக உமிழ்நீர் வடிதல், அதிகமாக தண்ணீர் பருகுதல், பகலில் குறைவாக தீவனம் உட்கொள்ளுதல், நிழலில் தஞ்சம் புகுதல் வாயை திறந்த நிலையில் வேகமாக சுவாசித்தல் போன்றவை வெப்ப அயற்சி நோயின் அறிகுறிகளாகும். இந்நோயில் இருந்து பாதுகாக்க கால்நடைகளை பகல் 11 மணிக்கு முன்பும், மாலை 4 மணிக்கு பின்பும் அவற்றை மேய்ச்சலுக்கு விட வேண்டும். கறவை மாடுகளுக்கு தினமும் 4 முதல் 3 முறையாவது தண்ணீர் வைத்திடல் வேண்டும்.

தண்ணீரின் மீது கலப்பு தீவனத்தை சிறிதளவு தூவும் போது, கால்நடைகள் அதிகமாக குடிக்கும். தாது உப்புக்கலவை, வைட்டமின்கள் கொடுப்பதன் மூலம், வெப்ப அயற்சி அறிகுறிகள் குறைவதுடன் பால் உற்பத்தி குறையாமல் இருக்கும். நீர் தெளிப்பான்கள், மின்விசிறிகளை கொட்டகைகளில் பயன்படுத்துவதன் மூலம், அவற்றின் உடல் வெப்பத்தை குறைக்கலாம். அதிகமாக பசுந்தீவனம் அளிக்கலாம். உலர் தீவனத்தை பகலில் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் கொடுக்கலாம்.

எருமை மாடுகளை குளியல் தொட்டி அமைத்து வெயில் நேரங்களில் தொட்டிகளில் விடுவதன் மூலம் வெப்ப அயற்சியில் இருந்து பாதுகாத்திடலாம். கோடைகாலத்தில் கோழிகளுக்கு அதிகாலை மற்றும் இரவில் தீவனம் அளிக்க வேண்டும். அனைத்து நேரங்களிலும் சுத்தமான குளிர்ந்த குடிநீர் இருக்குமாறு செய்ய வேண்டும். குடிநீரில் பி காம்ப்ளக்ஸ், குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம். அதிக இடவசதி உள்ள இடத்தில் உயரமான கூரை அமைத்து குறைவான எண்ணிக்கையில் கோழிகளை பராமரிக்க வேண்டும்.

இதேபோல் ஆடுகளுக்கு தினமும் குறைந்தபட்சம் 8 முதல் 12 லிட்டர் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். அம்மை, ஆட்டுக்கொல்லி நோய் போன்றவற்றுக்கான தடுப்பூசிகளை ஆடுகளுக்கு உரிய காலத்தில் போட வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் 2 கால்நடை மருத்துவமனை மற்றும் 79 கால்நடை மருந்தகங்களில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள், தாது உப்பக்கலவைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, கால்நடைகளை வெப்ப அயற்சியில் இருந்து பாதுகாக்க தேவையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.