Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கடும் வெயிலுக்கு தீர்வாக திருப்புத்தூரில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்புத்தூர், ஆக. 14: திருப்புத்தூரில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாத கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத வகையில், வெயில் சித்திரை, வைகாசி மாதம் போல கடுமையாக இருந்து வந்தது. பாதசாரிகள், சாலையார வியாபாரிகள், கடைகள் நடத்துவோர் உள்ளிட்டஅனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக அடைமழை பெய்யப்போவது போல வானில் மேகங்கள் திரள்வதும், பின்னர் அவை கலைந்து மாலை நேரங்களில் லேசான தூறல் விழுவதுமாக இருந்து வந்தது.

இதன்படியே நேற்றும் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இதனால் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், மாலை 3 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் லேசான சாரல் மழை துவங்கிய நிலையில், சிறிது நேரத்தில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடனும் இடைவிடாமல் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றன. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் உற்சாகமாக மழையில் நனைந்தபடியே சென்றனர். இந்த திடீர் மழை காரணமாக வெப்பம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.