Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெரும்பாலும் உறவுகளுக்குள்ளேயே நடப்பதால் சவாலாக மாறும் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கை: கடந்தாண்டில் 10க்கும் மேற்பட்ட வழக்கு

சிவகங்கை, ஆக. 13: சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுப்பது கடும் சவால் நிறைந்ததாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 80 சதவீத மக்கள் கிராமங்களிலேயே வசித்து வருகின்றனர். திருமணம் செய்ய ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் குறைந்தபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் பல ஆண்டுகளாக 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூக நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியன குழந்தை திருமண தடுப்பு குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு அவ்வப்போது குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் தற்போதும் தொடர்ந்து குழந்தை திருமணங்கள் நடந்து வருகின்றன. கிராமங்களிலேயே அதிகமான குழந்தை திருமணங்கள் நடத்தப்படுகிறது. பெரும்பாலும் உறவுகளுக்குள்ளேயே அதிகமான குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இத்திருமணங்கள் குழந்தை திருமணம் என்ற தகவல் மிக ரகசியமாக வைக்கப்படுகிறது. உறவுகள் யாரும் இது குறித்து வாய் திறப்பதில்லை. திருமணம் நடத்தும் உறவுகளுக்குள் முன் விரோதம் உள்பட வேறு பிரச்னைகள் இருந்தால் மட்டுமே குழந்தை திருமண தகவல் வெளியில் வருகிறது. இதனால் குழந்தை திருமணம் என்பது அரசு நிர்வாகத்திற்கு தெரிவதில்லை.

குழந்தை திருமணங்களில் பெண்களே 18 வயதிற்கு குறைவானவராக உள்ளனர். குழந்தை திருமணங்கள் நடத்தப்படுவது பாலியல் வன்கொடுமையின் கீழ் கடுமையான வழக்காக பதிவு செய்யப்படுகிறது. இதனால் திருமணம் செய்த அல்லது செய்ய இருந்த ஆண், கடுமையான வழக்கு பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார். சம்பந்தப்பட்ட உறவினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

இது குறித்து தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் கூறியதாவது: பள்ளிகளில் 10ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிப்பை கைவிட்டு இடைநிற்கும் மாணவிகளை கணக்கிட்டால் அதில் பெரும்பாலான மாணவிகளின் இடை நிற்றலுக்கு காரணம் திருமணம் என்பது தெரிய வரும். கொரோனா பரவலுக்கு பின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் இரண்டு மாணவிகள் முதல் ஐந்து மாணவிகள் வரை இதுபோல் இடை நிற்கின்றனர். திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண்ணுக்கும் இதுபோன்ற திருமணங்கள் தவறு என விழிப்புணர்வு வேண்டும். தற்போது எல்லாம் மாறிவிட்டது என்ற நோக்கிலேயே குழந்தை திருமணங்களுக்கு எதிரான பிரசாரங்கள் குறைந்தன. ஆனால் அவைகளை அதிகப்படுத்த வேண்டிய நிலையே உள்ளது. வருவாய்த்துறையினர், பள்ளி ஆசிரியர்கள், போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்கள், தொண்டு நிறுவனத்தினர் குழந்தை திருமண தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். புகார்கள் வந்தால் குழந்தை திருமணங்கள் தொடர்ந்து தடுத்து நிறுத்தப்படுகிறது. விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.