Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பனி, தூறல் மழையால் பொங்கல் பானை தயாரிப்பு மானாமதுரையில் சுணக்கம்

மானாமதுரை, டிச. 12: மானாமதுரை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பகலில் பனி, ஈரக்காற்று, தூறல் மழையால் பொங்கல் பாகைள் தயாரிக்கும் பணி முடங்கியுள்ளது. இதனால் பொங்கலுக்கு தயாராக வேண்டிய பானைகள் சூளையில் இடப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை கீழ்கரை குலாலர் தெருவில் நூற்றுக்கணக்கான மண்பாண்டம் செய்யும் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளனர். இவர்கள் எந்திரங்கள் உதவியால் திருவையில் மண்ணை இட்டு கையால் கலைநயமிக்க பூந்தொட்டி, மண்பானை, குடிநீர் ஜக்குகள், பணியார சட்டிகள், தட்டுகள், அம்மன் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தப்படும் அக்னி சட்டிகள், ஆயிரம் கண் பானைகள் உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை செய்து வருகின்றனர். இவ்வாறு சீசனுக்கு தகுந்தவாறு பல்வேறு மண்பாண்டங்களை தயார் செய்து தென்மாவட்டங்கள் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

அதேபோல் இவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் தயாரிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகல், இரவு நேரங்களில் உறைபனியுடன் திடீரென பெய்து வரும் தூறல் மழையால் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: ஜனவரி மாதம் 15ம் தேதி தைப்பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பல்வேறு அளவுகளில் பொங்கல் பானைகள், கலயங்கள், மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியை துவங்கி விடுவோம். வழக்கமாக ஆடி மாதம் காற்றுடன் துவங்கும் பருவகாலங்களில் புரட்டாசி மாதத்தில் லேசாக மழை பெய்யும். ஐப்பசி பின்பகுதியில் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து இரவுக்குள் மழை நின்றுவிடும்.

இதனால் எங்கள் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் ஷெட்டுகளில் பகலில் வேலை செய்துவிட்டு மாலை நேரங்களில் மண்பாண்டங்களை உலர்த்துவோம். ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தூறல் மழை, பகலில் வீசும் பனிக்காற்று காரணமாக பொங்கல் பானைகளை பாகுபதத்தில் தட்டி தட்டி உருண்டையாக தயாரிக்க முடியவில்லை. சாரல் மழையாக பெய்வதும், வெயில் அடிக்காமல் ஈரக்காற்றும் வீசி சீதோஷ்ண நிலை மோசமாக இருப்பதால் தயாரிக்கும் பானைகளில் ஈரத்தன்மை அதிகமிருக்கிறது. தொடர்ந்து காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் உருண்டை வடிவம் கிடைக்காமல் பானைகளை உலர வைக்க முடியவில்லை. இதனால் பானைகளை திறந்தவெளியில் காய வைக்க முடியாமலும், ஷெட்டுகளில் போதிய இடவசதி இல்லாமல் இருப்பதாலும் உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.