Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பன்றிகள் வளர்ப்பால் சுகாதாரக்கேடு: நகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மானாமதுரை, செப்.8: மானாமதுரையில் 10 ஆண்டுகளாக பன்றிகள் வளர்ப்பிற்கு கடுமையான தடை இருந்த நிலையில், மீண்டும் பன்றிகள் வளர்க்கப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மானாமதுரை பேரூராட்சியாக இருந்த போது பன்றிகள் வளர்க்கப்பட்டதால் பல்வேறு தொற்றுநோய்கள், வாகன விபத்து, சுகாதாரக்கேடு ஏற்பட்டது. அப்போதைய திமுக பேரூராட்சி தலைவர், செயல்அலுவலர், சுகாதார ஆய்வாளரின் தீவிர நடவடிக்கை காரணமாக பன்றிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. அதற்கு பின் நகராட்சியாக மாற்றப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது மீண்டும் பன்றிகள் வளர்ப்பதால் மானாமதுரையில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பாரதியார் தெரு, வடக்கு புதத்தெரு, நல்லதம்பியா பிள்ளை தெரு, சுந்தரபுர அக்ரஹாரம், வைகை ஆற்றங்கரையோரம் உள்ள செக்கடி தெரு, பட்டறைத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பன்றித் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை திறந்தவெளியில் திரிவதால், கழிவுநீர் கால்வாய்களில் விழுந்து எழுந்து சகதியாக தெருக்களில் வருகின்றன. தெருக்களின் ஓரம் கொட்டப்பட்டு உள்ள குப்பையை கிளறுவதால், துர்நாற்றம் வீசுவதோடு, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதன் காரணமாக, குழந்தைகள் தெருக்களில் விளையாட அச்சப்படுகின்றனர்.  குப்பையை கிளறுவதால் அவை காற்றில் தெருக்களில் பரவுகின்றன. சாலைகளில் அடிக்கடி குறுக்கே செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். மேலும் வீடுகளின் முன் வைக்கப்பட்ட குடிநீர் குழாயில் பன்றிகள் குட்டிகளுடன் வந்து தண்ணீர் அருந்துகிறது.

இதனால் சமையலுக்கு குடிநீர் பிடிக்க முடியாமல் குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பன்றிகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் நாகராஜ் கூறுகையில், மானாமதுரை வைகை ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியிலும், சோனையா கோயில் பின்புறமும் பட்டி அமைத்து சிலர் பன்றிகளை நூற்றுக்கணக்கில் வளர்க்கின்றனர். இவற்றை இரவு நேரங்களில் திறந்து விடுவதால் அவை தெருக்களில் திடீரென குறுக்கே ஓடுகிறது. இதனால் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. பன்றிகளால் குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் இருப்பதாலும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் பன்றிகளை நகரில் இருந்து அப்புறப்படுத்தவும், வளர்ப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.