Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருச்சி - ராமேஸ்வரம் இடையே ரயிலில் கூட்ட நெரிசலால் பயணிகள் கடும் அவதி: கூடுதல் பெட்டிகள் இணைக்க வலியுறுத்தல்

மானாமதுரை, செப்.8: திருச்சி - ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் நின்று கொண்டே செல்வதால் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16849) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து காலை 7:05 மணிக்கு கிளம்பி புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு பகல் 12:35 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக (வண்டிஎண்: 16850) மதியம் 2.50 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு அதே வழியில் திருச்சிக்கு இரவு 8.05 மணிக்கு சென்று சேருகிறது.

இந்த ரயிலில், காலை மாலை நேரங்களில் நாள்தோறும் அரசு ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் என ஏராளமான பயணியர் பயணிக்கின்றனர். தற்போது, இந்த தினசரி ரயிலில், காலை நேரத்தில் திருச்சியில் இருந்து கிளம்பும் போதே கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை பகுதிக்கு வந்தடையும்போது பயணியர்கள் ஏற சிரமமாக உள்ளது. குறிப்பாக, பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் தொலை தூரத்துக்கு நின்று கொண்டே பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், மக்கள் பஸ் பயணம் மேற்கொள்கின்றனர்.

ரயில் பயணிகள் சங்க நிர்வாகி கெங்காதரன் கூறியதாவது: திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 9:40 மணிக்கு மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் வருகிறது. ஆனால், இந்த ரயிலில் வார இறுதி நாட்களில் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் நிறைந்திருக்கும். மறுமார்க்கமாக ராமேஸ்வரத்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுவதால் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கையில் ஏறும் பயணிகள் திருச்சி வரை அமர இடமின்றி நின்றுகொண்டே செல்ல வேண்டியுள்ளது. ரயிலில் அமர இருக்கைகள் கிடைக்காமல், படிக்கட்டிலும், நடைபாதையிலும் அமர்ந்து பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால், பலர் ரயில் பயணத்தை தவிர்க்கின்றனர். எனவே, ரயில்வே நிர்வாகம் சார்பில் மானாமதுரை, சிவகங்கை காரைக்குடி மக்கள் நலன் கருதி இப்பகுதிக்கென கூடுதல் பெட்டிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

திருச்சி - ராமேஸ்வரம் பயணிகள் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் நின்று கொண்டே செல்வதால், கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.