Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநகராட்சி கூட்டங்களுக்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க மறுப்பு: அதிகாரிகளை கண்டித்து போர்க்கொடி

காரைக்குடி, ஜூன் 8: காரைக்குடி மாநகராட்சியில் 36 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். துணைமேயர் குணசேகரன் மேயர் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த திமுக ஆட்சியின் போது மாநகராட்சியில் அதிகாரிகள் நடத்தும் கூட்டத்திற்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் வந்தபிறகு அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களை மதிப்பது இல்லை. மாநகராட்சியில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு தகவல் தெரிவிப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது. அதிகாரிகள் அவர்கள் இஷ்டத்துக்கு செயல்படுகிறார்கள் எனவும், அனைத்து முடிவுகளையும் மாமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக எடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான கூட்டம் ஆணையர் (பொ) மாநகர நல அலுவலர் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து திமுக மாமன்ற உறுப்பினர் மைக்கேல் வெளியிட்டுள்ள ஆடியோ வைரலாகி வருகிறது.

இது குறித்து மாமன்ற உறுப்பினர் அன்னை மைக்கேல் கூறுகையில், அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களுக்கு எந்த வகையிலும் அழைப்பு கொடுக்கவில்லை. ஒரு போன் செய்து தகவல் தெரிவிக்கவில்லை. 11 மணி கூட்டத்திற்கு 10.50க்கு மேயர் (பொ) அழைத்து கூட்டத்திற்கு வரவில்லையா என கேட்கிறார். எந்த வகையிலும் அழைப்பு யாருக்கும் தரவில்லை. மாமன்ற கூடத்தில் நடக்கும் கூட்டத்திற்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஒரு வாரத்துக்கு முன்னர் நோட்டீஸ் தர வேண்டும்.

அவசர கூட்டம் என்றால் கூட்டம் தொடர்பான கடிதத்தை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் இதில் எதையும் செய்யாமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள், தற்போது நடக்கும் நிலைகள் குறித்து எடுத்துச் சொல்ல கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும் போது கூட்டத்திற்கு கூட அதிகாரிகள் அழைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாறவும் காட்சிகள் மாறி உள்ளது. அதிகாரிகளை யாரும் தட்டி கேட்க முடியாத நிலை உருவாகி உள்ளது என்றார்.

மாமன்ற உறுப்பினர் மெய்யர். மாநகராட்சியில் சில மாமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தகவல் கொடுத்து விட்டு பெருவாரியான உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் மாமன்ற கூட்ட அரங்கில் நடந்த ரகசிய கூட்டத்தின் மர்மம் என்ன என தெரியவில்லை. புதிய கூட்டு சதி நடத்த இந்த கூட்டம் நடத்தப்பட்டாத என தெரியவில்லை. தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.