திருப்புத்தூர், செப்.7: திருப்புத்தூர் அருகே தென்மாபட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயப் போட்டி நடைபெற்றது. திருப்புத்தூர் - கண்டரமாணிக்கம் சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் நடு மாடு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் நடுமாடு பிரிவில் 16 ஜோடிகள், சின்ன மாடு பிரிவில் 31 ஜோடிகள் என மொத்தம் 47 ஜோடிகள் பங்கேற்றன. நடுமாட்டிற்கு ஏழு மயில் தூரமும், சின்ன மாட்டிற்கு ஐந்து மைல் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதில் பங்கேற்பதற்காக சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க தொகை, கோப்பைகள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மாட்டுவண்டி போட்டியினை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தென்மாப்பட்டி கிருஷ்ண ஜெயந்தி விழா குழுவினர் செய்திருந்தனர்.

