ராமநாதபுரம், செப்.7: ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் அமைக்கப்பட்ட பண்ணை குட்டைகளில் சேமிக்கப்பட்ட மழைநீர் விவசாயத்திற்கு பயன்பெற்று வருவதால், கூடுதல் தேவைக்கு மழைக்காலம் துவங்கும் முன் பண்ணை குட்டைகளை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜூலை 29ம் தேதி தினகரன் செய்தி வெளியானது. இதனையடுத்து விவசாயிகளிடம் பெறப்பட்ட மனு மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு திட்டம் வரைவு மற்றும் திட்ட மதிப்பீடு தயார் செய்தனர். அதன்படி மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 25 கிராமங்களில் ரூ.70 லட்சம் மதிப்பில் 50 பண்ணைக்குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராமநாதபுரம் மாவட்டம் ஒரு வறண்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமாகும். இங்கு மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில் மழையளவும் குறைவாக இருப்பதால் அடிக்கடி வறட்சி ஏற்படுகிறது. பண்ணைக்குட்டைகள் மழை பெய்கின்ற போது நிலத்தில் வழிந்தோடுகின்ற மழைநீரை சேகரித்து வைத்து பயிர்கள் நீரில்லாமல் வறட்சியால் வாடும் நிலை ஏற்படும்போது பயிர்களுக்கு தக்க நேரத்தில் உயிர் நீர் பாசனம் மற்றும் துணை பாசனம் அளிக்க பயன்படுகிறது. இதனால் பயிர்கள் காக்கப்பட்டு உரிய மகசூல் பெற வகை செய்கிறது. மேலும், பண்ணைக்குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும் விளங்குகிறது.
மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் வறட்சி பாதிப்பு குறைப்பிற்கான ஊக்குவிப்பு உதவி திட்டத்தின்கீழ் 2026-27ம் ஆண்டின் கீழ், 25 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடலாடி ஒன்றியத்தில் பெரியகுளம்,ஏ.உசிலங்குளம், எஸ்.வாகைக்குளம், கமுதி ஒன்றியத்தில் பெருநாழி, டி.புனவாசல், திம்மநாதபுரம், முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பூசேரி, ஆதன்கொத்தன்குடி,தாளியரேந்தல், ராமநாதபுரம் ஒன்றியத்தில் பெருவயல், அலமனேந்தல். திருப்புல்லாணி ஒன்றியத்தில் மாயகுளம், வண்ணான்குண்டு. மண்டபம் ஒன்றியத்தில் ரெட்டைஊரணி, நொச்சியூரணி, திருவாடனை ஒன்றியத்தில் செக்காந்திடல், கடம்பனேந்தல், ஆர்.எஸ்.மங்களம் ஒன்றியத்தில் உப்பூர், சேத்திடல். பரமக்குடி ஒன்றியத்தில் பிடாரிசேரி, வேப்பங்குளம், நயினார்கோவில் ஒன்றியத்தில் மும்முடிச்சாத்தான், ராதாப்புளி, போகலூர் ஒன்றியத்தில் பாண்டிகண்மாய், அரியகுடி ஆகிய 25 கிராமங்களில் ரூ.70 லட்சம் மதிப்பில் 50 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட உள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்ட கிராமங்களைச் சார்ந்த ஆர்வம் உள்ள விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார் கார்டு, சிறு, குறு விவசாயி சான்று போன்ற ஆவணங்களுடன் கீழ்க்கண்ட அலுவலகத்தினையோ, வட்டார பொறியாளர்களையோ தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம், திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம், மண்டபம் மற்றும் திருவாடணை வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரகம், ராமநாதபுரம் (70946 14480)-யும் பரமக்குடி, போகலூர், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, நயினார்கோவில் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 5/339A, சௌகத் அலி தெரு, பரமக்குடி (90800 84339) ஆகியோரை தொடர்பு கொண்டு பதிவு செய்து பண்ணைக்குட்டை அமைப்பதற்கு சாத்தியக்கூறுள்ள முன்னுரிமைப்படி பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

