Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

மானாமதுரையில் ஓவர் லோடு கரும்புகளுடன் பயணிக்கும் டிராக்டர்கள்: காத்திருக்கும் விபத்து அபாயம்

மானாமதுரை, மே 7: மானாமதுரையில் போதிய பாதுகாப்பு இல்லாமல் இரட்டை டிரெய்லர்களில் கரும்பு ஏற்றி செல்லும் டிராக்டர்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. மானாமதுரை வட்டாரத்தில் இடைக்காட்டூர், முத்தனேந்தல், பதினெட்டாங்கோட்டை, வாகுடி, கிருங்காகோட்டை, பீசர்பட்டினம், கால்பிரவு, ராஜகம்பீரம்,கீழப்பசலை,ஆதனூர், மானாமதுரை, செய்களத்தூர், கள்ளர்வலசை, கல்குறிச்சிகரிசல்குளம் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு சாகுபடி ஆண்டுதோறும் நடக்கிறது. கிணற்றுப் பாசனம், போர்வெல் தண்ணீர் மூலமும் கரும்பு நடவு செய்யப்பட்டு, படமாத்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பிப்ரவரி முதல் மே மாதம் வரை வயல்களில் வெட்டப்படும் கரும்புகள் சர்க்கரை ஆலைக்கு அனுப்ப வெளிமாவட்டங்களில் இருந்து கரும்பு வெட்டுவோர் தங்களுக்கு சொந்தமான டிராக்டர்களுடன் வருகின்றனர். இவர்கள் வழக்கத்தை விட இந்த முறை இரண்டு டிரெய்லர்கள் பயன்படுத்தி கரும்புகளை கொண்டு செல்கின்றனர். குறிப்பாக பீக் அவர் நேரங்களில் அதிக அளவில் ஏற்றப்பட்ட கரும்பு லோடுகளுடன் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் டிராக்டர்களை இயக்குகின்றனர்.

ஒரு டிராக்டரில் இரண்டு டிரெய்லர்களை இணைத்திருக்கும் போது வளைவுகளில் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும் அதிக உயரத்திற்கு கரும்புகளை அடுக்கி செல்வதால் வளைவுகளில் திரும்பும்ேபாது்ம், வேகத்தடைகளிலும், திடீர் பிரேக் போடும் நேரங்களிலும் கரும்புகள் சரிந்து, அருகே செலும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இரண்டு டிரெய்லர்களை இணைத்து செல்வதற்கு அனுமதியில்லாத நிலையில், விதிகளை மீறி அதிக பாரங்களுடன் கரும்பு ஏற்றி செல்லப்படுவதை தடுக்க, மானாமதுரை ேபாக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.