சிவகங்கை, செப்.5: மழை காலமான இம்மாதமும் அதிகப்படியாக வெயில் அடிப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக காலம் தவறிய பருவ மழை, போதிய மழை இல்லாமை, கால்வாய், நீர்ப்பிடிப்பு பகுதிகள் பராமரிப்பின்மை உள்ளிட்டவைகளால் கண்மாய், குளங்களில் நீர் தேங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. வழக்கமாக ஜுலை முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழையால் கிடைக்கும் நீர் அடுத்த ஆண்டு கோடைகாலம் வரை நீர் நிலைகளில் இருக்க வேண்டும். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக அதுபோல் இல்லாமல் கோடைக்கு முன்பே நீர் இல்லாமல் குளங்கள், கண்மாய்கள் வறண்டு விடுகின்றன. மார்ச் முதல் ஜுன் வரை வெயில் இருந்தாலும் அக்னி நட்சத்திர காலத்தில் மட்டுமே கடுமையான வெயில் இருக்கும். இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே கடுமையான வெயில் அடிக்க தொடங்கியது.
மார்ச் மாதத்தில் தொடர்ந்த கடும் வெயில் மே மாத கத்திரி வெயில் கடந்த நிலையிலும் குறையாமல் தொடர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் ஜுலை மாதம் முதல் படிப்படியாக வெயில் குறையும். அவ்வப்போது தென் மேற்கு பருவ மழை, தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை பெய்யும் என்பதால் வெயில் குறைந்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு முற்றிலும் வேறாக அக்னி நட்சத்திர காலத்தில் இருப்பது போல் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் தற்போதும் உள்ளது. கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்தாலும் பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடிக்கிறது. வெப்பத்தின் தாக்கம் குறையாமல் அதிகரித்திருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது, கடந்த சில ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் செப்டம்பர் மாதத்திலும் கடுமையான வெயில் அடிக்கிறது. இது அதிர்ச்சியாக உள்ளது. மாலை நேரங்களில் மழை பெய்தாலும் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. தென் மேற்கு பருவ மழை கன மழையாக பெய்தால் வெயிலை சமாளிக்க உதவியாக இருக்கும். கூடுதல் மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம் என்றனர்.

