Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

திருவாடானை அருகே காவிரி கூட்டுக் குடிநீர் வீணடிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவாடானை, ஆக.3: திருவாடானை தாலுகா, மங்கலக்குடியிலிருந்து குறிஞ்சி நகர், குஞ்சங்குளம், வெளியங்குடி, சுப்பிரமணியபுரம் விலக்கு, கரையகோட்டை விலக்கு மற்றும் அஞ்சுகோட்டை வழியாகப் பல்வேறு கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர்க் குழாய்களில் அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டு, நாள்தோறும் பல லட்சம் லிட்டர் தூய்மையான குடிநீர் சாலைகளில் வீணாகி வருகிறது. இத்திட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தும், அவர்கள் இந்த உடைப்புகளைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகச் செயல்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தீவிரமாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் சாக்கடைக் கழிவுநீர் தேங்குவதுடன், அசுத்த நீர் மீண்டும் குடிநீர் குழாய்களுக்குள் சென்று சேர்வதால் பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, அப்பகுதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, உடைந்த குடிநீர்க் குழாய்களை விரைந்து சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.