Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவாடானை, மார்ச் 3: காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். திருவாடானை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற முதன்மையான கோரிக்கையை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மறியல் மற்றும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில இணை பொதுச்செயலாளர் சுதாகரன் தலைமை தாங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்றும் தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் ஏராளமான கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். அரசு உரிய முடிவை அறிவிக்கும் வரை தங்களது அறப்போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.