காரைக்குடி - மதுரைக்கு மானாமதுரை மார்க்கத்தில் புதிய ரயில் சேவை தொடங்கப்படுமா?.. பயணிகள் எதிர்பார்ப்பு
காரைக்குடி, ஜூன் 2: காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு புதிய ரயில் வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. காரைக்குடியில் இருந்து அனைத்து தேவைகளுக்கும் பொதுமக்கள், வர்த்தகர்கள் மதுரைக்கு அதிக அளவில் செல்லவேண்டிய நிலை உள்ளது. தொடர் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் பெரிய அளவிலான நோய் தாக்கம் உள்ளவர்கள் மதுரையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுகின்றனர். தவிர மதுரையில் எய்ம்ஸ் அமையும் பட்சத்தில் உயர்தர சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மொத்தம் மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் நடத்துபவர்கள், காய்கறி வியாபாரிகள், பூ விற்பனை செய்பவர்கள் என அனைவரும் மதுரைக்கு தான் பெரும்பாலும் செல்கின்றனர்.
இதனிடையே காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக புதிய ரயில் பாதை அமைக்க ஆய்வுகள் முடிந்த நிலையில் பல ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு புதிய ரயில் இயக்கும் பட்சத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனாக இருக்கும் என பயணிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், காரைக்குடியில் இருந்து மதுரைக்கு பஸ்சில் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகிறது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்ண்டாண்டு வரை செல்வதால் மீண்டும் நகருக்குள் செல்ல கூடுதலாக ஒரு மணி நேரம் ஆகிறது.



