Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி தேரோட்ட விழா கோலாகலம்: ஒரு லட்சம் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சிங்கம்புணரி, ஜூன் 2: சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி தேரோட்ட விழாவில் பக்தர்கள் ஒரு லட்சம் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பூரணை புஷ்கலா உடனான சேவுக பெருமாள் கோயில் வைகாசி திருவிழா கடந்த மே 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் மண்டகப்படி நிகழ்ச்சியாக நடைபெறும் இத்திருவிழாவின் 5ம் நாள் திருகல்யாணமும், 6ம் நாள் கழுவன் திருவிழாவும், 8ம் நாள் புரவி எடுப்பு விழாவும் நடைபெற்றது. இதை தொடர்ந்து 9ம் திருவிழாவான திருத்தேரோட்ட விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக காலையில் தேருக்கு ரதபூஜை செய்து சேவுக பெருமாள் பூரணை புஷ்கலா தேவியார் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு கிராமத்தார்கள் முன்னிலையில் அதிர்வேட்டுகளுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முதலாவதாக விநாயகர் தேரிலும், பூரணை புஷ்கலா உடனான சேவுக பெருமாள் அய்யனார் பெரிய தேரிலும், பிடாரி அம்மன் தேரிலும் வலம் வந்தனர். நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்த பெரிய தேர் கோயிலின் பின்புறமுள்ள கழுவன் கழுவச்சி சிலை மீது ஏற்றப்பட்டு மாலை 5.10 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து குழந்தை வரம், தொழில் வளம், உடல் நலம் வேண்டி சிவகங்கை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் இருபுறமும் உள்ள நிலை மீது தேங்காய் உடைத்து நேர்திக்கடன் செலுத்தினர்.

சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற தேங்காய் உடைப்பு நிகழ்சியில் ஒரு லட்சத்திற்கும் மேலான தேங்காய்களை பக்தர்கள் உடைத்தனர். தேங்காய்களை சேகரிக்க பொதுமக்கள் ஹெல்மெட், சாக்குகளை தலையில் மாட்டி கொண்டு மூட்டை, மூட்டையாக சேகரித்தனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்த்தில் சிங்கம்புணரி பகுதியில் அதிக தென்னை விளைச்சல் உள்ளதால் பல நூறு ஆண்டுகளாக நேர்த்திக்கடனாக தேங்காய்களை பக்தர்கள் உடைத்து வருகின்றனர். இன்று இரவு 10ம் நாளில் பூப்பல்லக்கு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.