மேட்டூர், ஆக.29: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6,571 கனஅடியாக சரிந்துள்ளது. கேரள மாநிலத்தில் மழை தணிந்த காரணத்தால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று காலை விநாடிக்கு 6,045 கனஅடியாக சரிந்தது. இதனால் கபினி அணையிலிருந்து காவிரியில் வௌியேற்றப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 6,100 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கேஆர்எஸ் அணையிலிருந்து 2498 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு நேற்று 2வது நாளாக விநாடிக்கு 6,500 கனஅடியாக நீடித்தது. நீர்வரத்து குறைந்த போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பரிசல் இயக்குவதற்கான தடை தொடர்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 7,371 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 7,094 கனஅடியாக சரிந்தது.
நேற்று மாலை நிலவரப்படி, நீர்வரத்து விநாடிக்கு 6,571 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நேற்று காலை 89.61 அடியாக இருந்த நீர்மட்டம், மாலையில் 89.72 அடியானது. நீர் இருப்பு 52.33 டி.எம்.சி.யாக உள்ளது.



