சேந்தமங்கலம், செப்.26: எருமப்பட்டி வட்டாரத்தில் சம்மங்கி பூவின் விலை உயர்ந்து, கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பரவலாக சம்மங்கி சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதி விவசாயிகள் பூக்களை பறித்து நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூச்சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். எருமப்பட்டி பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
புரட்டாசி மாதம் பெருமாள் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருவதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை உயர்ந்து வந்தது. ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மேலும் விலை உயர்ந்து, ஒரு கிலோ ரூ.150 விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


