சேலம், அக்.22: சேலம் மாவட்டம், வாழப்பாடி வைத்தியகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45), லாரி டிரைவர். இவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து, லாரியில் பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி புறப்பட்டு சென்றார். கடந்த 18ம் தேதி, வீராணம் அடுத்த அடிமலைப்புதூர் அருகே வந்தபோது செல்வராஜ் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த புளியமரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த பேட்டரிகள் சாலையில் கவிழ்ந்துள்ளது. அப்போது இருசக்கர வாகன பேட்டரிகள் 114, கார் பேட்டரிகள் 192, லாரி பேட்டரிகள் 24 என மொத்தம் 330 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து செல்வராஜ் வீராணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


