சேலம், ஆக.21: திருப்பூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (76). இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி இறந்து விட்ட நிலையில் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் வசித்து வரும் மகள் சங்கீதாவின் வீட்டுக்கு ஈஸ்வரன் வந்தார். மகளின் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்தார். அப்பகுதியில் உள்ள காய்கறி கடையில் பணியாற்றி வந்த ஈஸ்வரன், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு மாடியில் உள்ள அறைக்கு படுக்க சென்றார்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மகள் சங்கீதா, மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சென்ற செவ்வாய்பேட்டை போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



