ஆத்தூர், ஆக.21: கெங்கவல்லி பேரூராட்சியில், அனுமதியின்றி பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் சாலையோரம் பேனர்களை வைத்துள்ளனர். நீண்ட நாட்கள் ஆகியும், இந்த பேனர்களை எடுக்காமல் இருப்பதாலும், சூறாவளி காற்று வீசும் போது சாய்ந்து, சாலைகளில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டது.
இது குறித்து, சேலம் மாவட்ட எஸ்பி குத்தாலிங்கத்துக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில், கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார், பேரூராட்சி பணியாளர்களை கொண்டு, அரசியல் கட்சியினர் வைத்திருந்த பேனர்களை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதை அறிந்த அரசியல் பிரமுகர்கள் சிலர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



