சேலம் அருகே வளர்ப்பு பன்றி கறியை காட்டு பன்றி இறைச்சி என்று கூறி விற்றவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: வனத்துறையினர் நடவடிக்கை
சேலம், ஆக.19: சேலம் அருகே வளர்ப்பு பன்றி கறியை காட்டு பன்றி இறைச்சி என்று கூறி விற்றவருக்கு வனத்துறையினர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். சேலம் திருமலைகிரி அருகே செம்மண் திட்டு பகுதியில் காட்டு பன்றி இறைச்சி விற்கப்படுவதாக சேலம் தெற்கு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தெற்கு வனச்சரகர் சுகுமார், வனவர்கள் தினேஷ், சஞ்சய் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பன்றி கறியை விற்ற செம்மண் திட்டை சேர்ந்த மாணிக்கம்(56) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், இவர் ஊர் பகுதியில் வளர்க்கும் பன்றி இறைச்சியை காட்டு பன்றி இறைச்சி என கூறி விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து காட்டு பன்றி இறைச்சி என கூறி விற்பனை செய்த குற்றத்திற்காக மாணிக்கத்திற்கு, வனத்துறையினர் ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தனர்.



