சேலம், ஆக.13: சேலத்தில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று நகையை திருடி சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் பள்ளப்பட்டி அரிசிபாளையம் சையத்காதர் தெருவை சேர்ந்தவர் நோவா டொமினிக்(46). கடந்த ஜுன் மாதம் வேலைக்கு சென்றுவிட்டு அதிகாலை நேரத்தில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ஓட்டை பிரித்து உள்ளே சென்ற நபர்கள், அங்கிருந்த 2 பவுன் நகை, 230 கிராம் வெள்ளி பொருட்களை திருடிசென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஓட்டை பிரித்து நகையை திருடிசென்றது, கருப்பூர் செங்கரடு பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத்(19), கருப்பூர் பழைய மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கவியரசன்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் திருட்டுபோன நகையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.



