பயணிகள் நிழற்கூடம் அமைக்க எதிர்ப்பு
இளம்பிள்ளை, நவ.12: இளம்பிள்ளை அருகே, பயணிகள் நிழற்கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக-அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இடங்கணசாலை நகராட்சி கே.கே.நகர், சாத்தம்பாளையம் செல்லும் பிரிவு சாலையில், திமுக பிரமுகரான அருள் என்பவரது வீட்டில், கே.கே.நகர் மின்சார அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் எதிரே சங்ககிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ சுந்தரராஜன் தொகுதி நிதியிலிருந்து, பயணிகள் நிழற்கூடம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை பூமிபூஜை போட இருந்த நிலையில், அருள் தனது வீடு முன்பு நிழலுக்காக சிமெண்ட் ஷெட் அமைக்க ஏற்பாடு செய்து வந்தார். அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று தடுத்து நிறுத்தினர். இதனை அறிந்த திமுகவினர் அங்கு விரைந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் எஸ்ஐ ஜீவிதா உள்ளிட்ட போலீசார், விரைந்து வந்து இடங்கணசாலை நகர அதிமுக செயலாளர் சிவலிங்கம், மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய அதிமுக பொறுப்பாளர் செல்வகுமார், இடங்கணசாலை நகர திமுக பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நெடுஞ்சாலை துறையினர் அளவீடு செய்த பின்னர் நிழற்கூடமும், சிமெண்ட் ஷெட்டும் அமைத்து கொள்ள வேண்டும் எனக்கூறி இருதரப்பினரையும் அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.