காவல்துறை சார்பில் ஆட்டோ பிரசாரம்
வாழப்பாடி, நவ.12: நகை திருட்டு குறித்து முதியோர் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காரிப்பட்டி காவல்துறை சார்பில் ஆட்டோவில் பிரசாரம் செய்யப்பட்டது. அயோத்தியாப்பட்டணம் அருகே காரிப்பட்டி காவல்நிலையம் சார்பில், காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்டோவில் பேனர் பொருத்தி பிரசாரம் செய்யப்பட்டது. அதில், வயதானவர்கள் வீட்டை திறந்து வைத்து, பாதுகாப்பற்ற முறையில் கவனக்குறைவாக இருக்க கூடாது. வயதானவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க கூடாது.
வயதானவர்கள் நகைகள் மற்றும் பணத்தை, தனிமையான வீடுகளில் தேவைக்கு அதிகமாக வைத்துக் கொள்ள வேண்டாம். வீட்டில் உள்ளவர்களிடம் முகவரி கேட்பது போலவோ, தண்ணீர் கேட்பது போலவோ யாரேனும் வந்தால், கதவை திறக்காமல் பதில் சொல்ல வேண்டும். அதிக விலையுள்ள பொருட்கள் இருப்பதை வெளியில் காட்டிக் கொள்ள கூடாது. வீட்டுக்கு வெளியில் உள்ள விளக்குகளை, இரவு நேரங்களில் அணைக்க கூடாது. நகை, பணத்தை வங்கியில் வைக்க வேண்டும். அருகில் உள்ள வீட்டார்களிடம் நல்ல விதமாக, உதவும் வகையில் பழக்கம் வைத்து கொள்ள வேண்டும், பெண்கள் கழுத்தில் நகைகளை அணிந்து செல்லும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கஷ்டப்பட்டு உழைத்து சேகரித்த பணம், நகைகளை திருடர்கள் திருடி செல்ல வாய்ப்பு கொடுக்க வேண்டாம். இனிவரும் காலங்களில் யாரும் ஏமாற வேண்டாம். வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்தி குற்றத்தை தடுப்போம் என்று தெரிவித்து, ஆட்டோவில் பேனர் பொருத்தி பிரசாரம் செய்யபபட்டது.