சேலம், ஆக.12: சேலம் காரிப்பட்டி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் காரிப்பட்டி பக்கமுள்ள கூட்டாத்துப்பட்டி நேருநகரை சேர்ந்தவர் சடையன் (49). இவர் கோதமலை காடு பகுதியில் ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை பராமரித்து வருகிறார். அங்கேயே உள்ள வீட்டில் மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று அனைவரும் வெளியே சென்று விட்டனர். பகலில் சடையன் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு கொண்டி உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த ரூ.15 ஆயிரம், கால்பவுன் நகை ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்மநபர்கள், நகை-பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.



