ரூ.3 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
கெங்கவல்லி, டிச.9: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி மூட்டைகள் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் போனது. ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 35 விவசாயிகள் 171 மூட்டை பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ரூ.6,889 முதல் ரூ.7,689 வரையும், டிசிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ரூ.9,289 முதல் ரூ.10,269 வரையும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ரூ.3,769 முதல் ரூ.4,589 வரை ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த பருத்தி மூட்டைகள் ரூ.3 லட்சத்திற்கு ஏலம் போனதாக கூட்டுறவு சங்க உதவி பொதுமேலாளர் சாமிநாதன் தெரிவித்தார்.