ஜலகண்டாபுரம், டிச.3: ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், திறனறித்தேர்வில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு, கடந்த அக்டோபர் மாதம் தமிழகம் முழுவதும் நடந்தது. இத்தேர்வில் 2,70,508 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தேர்வெழுதிய 206 மாணவிகளில் 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து நான்காவது ஆண்டாக(2022-29 பேர், 2023-32 பேர், 2024-41 பேர், 2025-64 பேர்) ஒரே பள்ளியில் இருந்து அதிக மாணவிகள் தேர்ச்சி என்ற மாநில அளவிலான சாதனையை இப்பள்ளி தக்க வைத்துள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த தமிழ் ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற்ற லெனின், பட்டதாரி ஆசிரியை ஜானகி ஆகியோருக்கு தலைமை ஆசிரியை கலா, உதவித் தலைமை ஆசிரியர் அருண் கார்த்திகேயன் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுக்கு ரூ.33,000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement

