சங்ககிரி, டிச.3: சங்ககிரி அருகே அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கோட்ட வருதம்பட்டி ஊராட்சி வளையசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி(65). அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற அதிகாரியான இவரது மனைவி புஷ்பவள்ளி(56). இவர் திருச்செங்கோட்டில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். ராஜாமணி, புஷ்பவள்ளி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று காலை, வழக்கம்போல் புஷ்பவள்ளி வேலைக்கு சென்று விட்டார். தொடர்ந்து வீட்டை பூட்டி விட்டு ராஜாமணியும் வெளியில் சென்று விட்டார்.
மதியம் 2 மணியளவில் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. உள்ளே இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன. 6 பவுன் தங்க நகையை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், சங்ககிரி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். இதில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க விடப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

