Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரமான ஜவுளி உற்பத்தி தொழில் தொடர்ந்து நசிவு

சேலம், ஜூன் 29: தமிழகத்தில் சேலம் உள்பட 10 மாவட்டங்களை சேர்ந்த ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரமான ஜவுளி உற்பத்தி தொழில் நாளுக்கு நாள் நசிந்து வருகிறது. மொத்த உற்பத்தியில் 4சதவீதம் மட்டுமே வௌிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் புலம்பி வருகின்றனர். தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக ஜவுளி உற்பத்தியில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் பஞ்சு விலை ஏறாமல் இருந்ததால் ஜவுளி உற்பத்தி நல்லமுறையில் இருந்தது. அதற்கு ஏற்ப ஏற்றுமதியும் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.54 ஆயிரத்திற்கு விற்றது.

பஞ்சு விளைச்சல் குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது ஒரு கேண்டி பஞ்சு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் வரை சென்றது. தற்போது மார்க்கெட்டில் ஒரு கேண்டி பஞ்சு ரூ.58 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. பஞ்சு விலை சீராக இருப்பதால் கடந்த சில மாதமாக தமிழகத்தில் பல பகுதிகளில் ஜவுளி உற்பத்தி சீராக உள்ளது. ஆனால் உற்பத்தி ஏற்ப விற்பனை இல்லாததால் ஜவுளிகள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து சேலத்தை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், விருதுநகர் உள்பட பல இடங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

இப்பகுதிகளில் விசைத்தறியில் டவல், கேரளா வேஷ்டி, சேலை, அபூர்வா சேலை, காட்டன் சேலை, வேஷ்டி உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு பல கோடி மதிப்பில் ஜவுளி உற்பத்தி நடக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த பொங்கலுக்கு பிறகு எப்போதும் இல்லாத அளவில் ஜவுளி தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆட்டோ லூம்ஸ் எனப்படும் நவீனவிசைத்தறிகளில் உள்நாட்டுக்கு தேவையான சேலை, டவல் போன்றவை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனால் சாதாரண விசைத்தறியாளர்கள் தாக்கு பிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஜவுளி ஏற்றுமதியை ஒன்றிய, மாநில அரசுகள் முறைப்படுத்தாத நிலையாகும். கடந்த 11 ஆண்டுகளாக ஜவுளி ஏற்றுமதி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கி போயுள்ளது. சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழில் செய்தபலர், மாற்று தொழிலுக்கு போயுள்ளனர். போதிய ஜவுளி ஆர்டர்கள் இல்லாததாலும், தொழிலாளர்கள் வருகை இல்லாததாலும் பல இடங்களில் விசைத்தறி கூடங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

சிலர் விசைத்தறிகளை பழைய இரும்பு கடைகளில் எடைக்கு விற்கின்றனர். நமது அண்டை நாடான சீனா, வியட்நாம், பாகிஸ்தான், இந்தோனேஷியா, பங்களாதேஷ் உள்பட பல நாடுகளுக்கு அதிகளவில் ஜவுளிகள் கேட்டு ஆர்டர்கள் குவிகிறது. ஆனால் நமக்கு வரவேண்டிய ஆர்டர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறது. பல கோடி மக்கள் தொகை கொண்ட நம்நாட்டில் ஜவுளி ஏற்றுமதி வெறும் 4 சதவீதம் மட்டுமே உள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் இருந்து 2014ம் ஆண்டு வரை ஜவுளி ஏற்றுமதி நல்லமுறையில் இருந்தது.

அப்போது நூல் மற்றும் ஜவுளிக்கு அப்போதைய அரசு வரி விதிக்கவில்லை. 2017ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அதன்பிறகு ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டியால் 20 முதல் 25 சதவீதம் ஜவுளி விலை அதிகரித்துள்ளது. ஒரு கோடி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது. ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.