ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் பரபரப்பு; ஜீப்பில் ஏற்றியபோது போலீசை தள்ளிவிட்டு 2 ரவுடிகள் தப்பி ஓட்டம்; வழிப்பறி வழக்கில் கைதானவர்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி!!
சேலம், அக்.28: சேலம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் கோபி (30). இவர் நேற்று காலை கண்டர்குல மாணிக்கம் பஸ் நிறுத்தம் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை 3 பேர் கத்திமுனையில் மடக்கி பணம் கேட்டு மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்துக்ெகாண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசில் கோபி புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், பிரபல ரவுடிகளான முத்தனம்பாளையம் தேவராஜ்(38), கண்டர்குல மாணிக்கம் பெரியாண்டிப்பட்டியை சேர்ந்த சந்தோஷ்குமார்(32), பெரியாண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்த பிரபு(37) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களில் சந்தோஷ்குமாரும், பிரபுவும் ‘ஏ’ பிரிவு ரவுடிகளாகும். இதையடுத்து இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நேற்று மாலை போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், ரவுடிகள் சந்தோஷ்குமாரும், பிரபுவும் போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களை விரட்டிச்சென்றும் பிடிக்க முடியவில்லை. இதனால் போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் துணை கமிஷனர் மகேந்திரன், உதவி கமிஷனர் முரளி ஆகியோர் ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேசனுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய ரவுடிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். போலீஸ் ஸ்டேசனில் நடந்த இந்த சம்பவம் போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


